
காரைக்குடியில் தனியார் மருத்துவமனையில் தவறான அறுவை சிகிச்சையால் சிறுவன் பிறப்புறுப்பை இழந்ததாக எழுந்த புகாரில் மருத்துவர்கள் அலச்சியம் காட்டவில்லையென இந்திய மருத்துவ சங்கம் விளக்கமளித்துள்ளது.
காரைக்குடியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் தனது 10 வயது மகனுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை ஏற்பட்டதால் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் காண்பித்துள்ளார். அந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
சிகிச்சையின் போது தவறாக பையனின் ஆண் உறுப்பை வெட்டியதாக அவரின் தாயார் தனலெட்சுமி காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் புனியாவிடம் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் மருத்துவர்கள் சோமசுந்தரம், காமாட்சி சந்திரன் இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்திய மருத்துவ சங்க மாநிலத் தலைவர் மருத்துவர் ஸ்ரீதர் தலைமையில் இந்திய மருத்துவக் கழக முன்னாள் மாநில தலைவர் மருத்துவர் ஆர்.வி.எஸ்.சுரேந்திரன், குளோபல் மருத்துவர் குமரேசன் எள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பிய போது சிறுவன் ஆரோக்கியமாக இருந்துள்ளார். அதன் பின்னர் சிறுவனுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுவனை மருத்துவர்கள் மீண்டும் பரிசோதனை செய்த போது அறுவை சிகிச்சை செய்த காயத்தில் இரத்த ஓட்டம் சீராக இல்லாதது தெரிய வந்தது.
அதனை சரிசெய்ய சிறப்பு அறுவை சிகிச்சை உடனே செய்ய வேண்டிய சூழலில் மதுரை தனியார் மருத்துவமனைக்கு சிறுவனை அனுப்பிவைத்து சிகிச்சை செய்ய பரிந்துரைத்துள்ளனர். அங்கு சிறுவனுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தற்போது காயம் ஆறி வருகிறது.
சிறுவனுக்கு பிறப்புறப்பில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை பரவலாக எளிதாக செய்யக் கூடியது தான். ஆனால் அவருக்கு அறுவை சிகிச்சைக்குப் பின்னர், திடீரென இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் குறைவு ஏற்பட்டுள்ளது.10 லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய அரிதான பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த சிறுவனுக்கும்,அவரது குடும்பத்திற்க்கும் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இந்திய மருத்துவ சங்கம் வருத்தம் தெரிவிக்கிறது. ஆனால் சிறுவனுக்குச் செய்த அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் எந்த அலச்சியமும் காட்டவில்லை, மிகவும் அரிதான பாதிப்பு ஏற்பட்ட சிறுவனுக்கு தாமதமின்றி உடனடியாக உயர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பிறப்புறுப்பு முழுமையாக நீக்கப்படவில்லை, ஒரு சிறு பகுதிதான் நீக்கப்பட்டு,பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நாளடைவில் பிறப்புறுப்பில் உள்ள குறைபாடு முழுமையாக குணமாகும் என சிறப்பு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.
மேலும் சிறுவனின் சிகிச்சைக்குத் தேவையான உதவிகளைச் செய்ய மருத்துவர்கள் தயாராகவுள்ளனர் என்று தெரிவித்தார்.
செய்தி& படங்கள்
சாய் தர்மராஜ்
