
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், வீரை ஊராட்சிக்குட்பட்ட நெடுங்குளம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது – மாண்புமிகு அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்
தமிழ்நாடு அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு 14.05.2026 அன்று) சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், வீரை ஊராட்சிக்குட்பட்ட, நெடுங்குளம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி அமையப்பெற்றுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், வீரை ஊராட்சியில் சுமார் 120 எண்ணிக்கையிலான மக்கள் தொகையை கொண்டுள்ள நெடுங்குளம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, உறுதிக்கோட்டை – வேலாயுதப்பட்டிணம் சாலை முதல் நெடுங்குளம் வரையுள்ள 1.790 கி.மீ பழுதடைந்த தார்ச்சாலை மற்றும் தொடர் மண் சாலையினை தார்ச்சாலையாக அமைத்துத்தருமாறு, இப்பகுதி மக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பான ஆட்சியின் அமைச்சரவையில் அமைச்சர் பொறுப்பும் ஏற்றவுடன், இப்பகுதி மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றிடும் வகையில், எனது முதல் பணியாக, இப்பகுதியில் மேற்குறிப்பிட்ட சாலை பணிகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த முதன்மை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இச்சாலையினை ரூ.121.67இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோன்று, பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அறிந்து, அதனை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மாவட்ட முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, தேவகோட்டை சார் ஆட்சியர் திரு. ஆயுஷ் வெங்கட் வட்ஸ்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மரு.ஜி.அரவிந்த் அவர்கள், செயற்பொறியாளர் (மா.ஊ.வ.மு) திருமதி இந்துமதி அவர்கள், தேவகோட்டை வட்டாட்சியர் திரு.தங்கமணி அவர்கள், தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. காதர் மொய்தீன் மற்றும் திரு.விஜயகுமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி & படங்கள்
சாய் தர்மராஜ்
