
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, வைய்யம்பட்டியில் பயோ என்சைம் (Bio Enzyme) எவ்வாறு தயாரிப்பது, அதன் பயன்கள் குறித்து சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லுாரி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மாணவிகள் ஸ்ரீநிதி, நாகமீனா, மகாலெட்சுமி, அமிர்த ஸ்ரீ, பூஜா ஸ்ரீ, கௌரி ஊரக வேளாண்மைப் பணி அனுபவத் திட்டப் பயிற்சியின் ஒரு பகுதியாக செயல் விளக்கம் அளித்தனர்.
பயோ என்சைம் (Bio Enzyme) என்பது இயற்கையான உயிரியல் நொதி அல்லது இயற்கை சுத்தப்படுத்தும் திரவம் என்று பொருள்படும். இரசாயன வேதிப் பொருள்கள் கலக்காமல் இயற்கையான முறையில் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி கொடுத்தனர்.

வீட்டில் சமையலறைக் கழிவுகள் (பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்கள்), வெல்லம் (அல்லது நாட்டுச் சர்க்கரை) மற்றும் தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து காற்றுப் புகா வண்ணம் இறுக மூடி 3 மாதங்கள் நொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இவையே பயோ என்சைம் .

இது ஒரு நச்சுத்தன்மையற்ற இரசாயன வேதிப் பொருட்கள் கலக்காமல் இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்படும். வீடு துடைக்க, பாத்திரம் கழுவ, செடிகளுக்கு உரமாக மற்றும் கழிவுநீரைத் தூய்மைப்படுத்த இதைப் பயன்படுத்தலாம்.
இரசாயன துப்புரவு சாதனங்களுக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் நச்சுகளை நீக்கி துாய்மைப்படுத்த முடியும். மரம்,செடி,கொடி வளர்ச்சியை மேம்படுத்தவும், விளைச்சலை அதிகரிக்கவும், பயோ என்சைம்களைப் பயன்படுத்தப்படலாம்.
கழிவு மேலாண்மை மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆகியவற்றில் பயோ என்சைம்கள் பயன்படுத்தப்படுகின்றன.எளிய வகையிலான, அதிகம் செலவில்லாத இந்த பயோ என்சைம் கரைசலை துணிகள் துவைக்கவும் பயன்படுத்தலாம்.
இந்த பயோ என்சைம் சுயதொழில் செய்பவர்களுக்கு பெரும் வரப்பிரசாதம் ஆகும் என்று விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினர்.
