திருப்பரங்குன்றம் கல்தூணில் சனிக்கிழமை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு…

திருப்பரங்குன்றம் கோயில் ஆலோசனைக்குப் பின்னர் அங்குள்ள கல்தூணில் நாளை (நவ.28 – சனிக்கிழமை) தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இடையீட்டு மனுவின் மீதான விசாரணையின் மீது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

திருப்பரங்குன்றம் கோயில் ஸ்தானீகர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர் அங்குள்ள கல்தூணில் நாளை (நவ.28) தீபம் ஏற்ற வேண்டும்.

மலை உச்சியில் ஏற்கெனவே ஏற்றப்பட்ட தீபம் எரிந்து கொண்டிருந்தால், அதிலிருக்கும் ஜோதியைக் கொண்டு கல்தூண் விளக்கை ஏற்றலாம். மேலும், பக்தர்கள் மலையில் விளக்கேற்ற அனுமதிக்கலாம்.

மலையில் உள்ள தர்காவை ஒட்டிய 50 மீட்டர் பகுதியை பாதுகாக்க வேண்டும். தர்காவுக்கு செல்லும் எந்தவொரு பக்தரும் பாதிக்கப்படக் கூடாது. இதற்கான பாதுகாப்புப் பணியில் சிஆர்பிஎஃப் வீரர்களை ஈடுபடுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தமிழக தலைமைச் செயலாளர், தமிழக டிஜிபி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு குறித்து விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதுமட்டுமல்லாது திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், கோயில் நிர்வாகம், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளான நீதிபதி எஸ்.வைத்தியநாதன் மற்றும் எஸ்.பார்த்திபன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு திட்டமிட்டு மீறியதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துகள் பின்வருமாறு:

’‘உச்ச நீதிமன்றத்தால் ஓர் உத்தரவு பிறப்பிக்கப்படும்போது, யாரும் அதைத் தனித்தனியாகப் பிரித்துப் பொருள் கொள்ள முடியாது. உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை நீர்த்துப் போகச் செய்ய முடியாது என்பதை நீதிமன்றத்தின் உத்தரவு மக்களிடம் உணர்த்த வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதில் அனைத்து அதிகார வரம்புகளும் உறுதுணையாகவே இருக்க வேண்டும். நீதியை களங்கப்படுத்தும் எந்த முயற்சியும், அது எந்த நபரால் செய்யப்பட்டாலும் பொருத்துக் கொள்ளப்படாது.

இந்த நீதிமன்றத்தின் உத்தரவு என்பது யாரும், எந்த அதிகாரியும் பேரம் பேசுவதற்கானது அல்ல. உச்ச நீதிமன்றத்தின் ஓர் உத்தரவை நீதிமன்றமே மாற்றினால்தான் உண்டு.

திருப்பரங்குன்றம் தீபமேற்றும் வழக்கு சிக்கலான வரலாற்றைக் கொண்டது. இதில், நீதிமன்றத்தின் உத்தரவை வெளிப்படையாக மீறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை அவமதிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். தேவஸ்தானம் வாரியம், நவம்பர் 20-ம் தேதி உத்தரவுக்கு திரித்துப் பொருள் கொண்டு, நீதிமன்ற உத்தரவை மீறிச் செயல்பட்டுள்ளது. ஆட்சியர், தேவஸ்தானத்தின் தீர்மானத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறார்” என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலர் நேரில் ஆஜராகும்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.முன்னதாக, ‘தீபத்தூணில் தீபம் ஏற்றக் கூடாது என்று ஏற்கெனவே தமிழக அரசு தீர்மானித்துவிட்டது’ என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

திருப்பரங்குன்றம் கல்தூணில் கார்த்திகை தீபத்திருவிழா அன்று (நவ.24) ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்து கடந்த 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் இருப்பார் எனத் தெரிவித்த நீதிமன்றம், தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது குறித்த அறிக்கையை மூன்று நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தியது.

ஆனால், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கல்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கமாக ஏற்றப்படும் இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. மேலும் தீப விவகாரம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், “திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம் ஏற்ற நியமிக்கப்பட்ட குழுவுக்கு கோயில் நிர்வாகம் முறையான அனுமதியை வழங்காததே கல்தூணில் தீபம் ஏற்றப்படாததற்குக் காரணம்,” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மனுதாரர் தரப்பு, மத்திய தொல்லியல் துறை சார்பில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், “திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கப் போவதில்லை என்று ஏற்கெனவே அரசு முடிவு செய்துவிட்டது. அறங்காவலர் குழு அனுமதி அளிக்கவில்லை என்று கூறுவது மறைந்து கொள்வதற்கான ஒரு கருவி, புகலிடம். கல்தூணில் தீபம் ஏற்றக்கூடாது என்று அறங்காவலர் குழு எப்போது தீர்மானம் நிறைவேற்றியது என்பதைக் காட்டுவதற்கு ஆவணங்களில் எதுவும் இல்லை. அதுமட்டுமல்ல, அறங்காவலர் குழு மீது அரசுக்கு அதிகாரம் உண்டு. ஆட்சியர் அதை மீறி உத்தரவை செயல்படுத்த முடியும்.

அப்படியிருக்க, உச்ச நீதிமன்றத்தின் நவம்பர் 20-ம் தேதி உத்தரவின்படி கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு குழு அனுமதிக்கவில்லை என்பதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று ஆட்சியர் பின்னர் எப்படி கூற முடியும்?’ என்று வினவியுள்ளது.என்று நீதிபதிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்திய தொல்லியல் துறை (ASI) சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘தொல்லியல் துறையின் ஒரு குழுவினர் திருப்பரங்குன்றம் கல்தூணில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று விரும்பினர், மற்றொரு குழுவினர் விரும்பவில்லை. நவம்பர் 24-ம் தேதி ஒரு குறிப்பிட்ட முறையில் அதைச் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது.

அனைவருக்கும் பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன, மாநில நிர்வாகத்துக்கும் கொடுக்கப்பட்டது. தொல்லியல் துறைக்கும் கொடுக்கப்பட்டது.

ஆனால், தீபம் ஏற்றுவதற்காக ஆட்சியர் மேற்கொண்ட முயற்சிகள் வெறும் கண்துடைப்பு என்று தொல்லியல் துறை தரப்பு அறிக்கைகள் கூறுகின்றன. தொல்லியல் துறை குழு தர்கா நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. இது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு” என்றார்.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரதான வழக்கில் இன்று விசாரணை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வேளாண் விவசாயக் கண்காட்சி..

Recent Posts