
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வருகிற 06-10-2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஐ.பரந்தாமன், தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் எஸ். சுகன்யா ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத் தேர்தலில் திமுக போட்டியிடுவது குறித்து உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இடைத் தேர்தல் வேட்புமனு தொடங்கிய நாளிலேயே திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் MLA பரந்தாமன் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் சேது செல்வம் போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
