
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வெற்றிகரமாக சேவைகள் செய்து வரும் மக்கள் மன்றம் தனது 21வது ஆண்டுவிழா கொண்டாடியது.
21வது ஆண்டுவிழாவை முன்னிட்டு காரைக்குடி சுற்றுவட்டார மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அவசர ஊர்தி, அமரர் ஊர்தி, முதியோர் உதவி வாகனம், வீடு தேடி தாதியர் சேவை என நான்கு கட்டணமில்லா ஊர்தி சேவையினை இன்று தொடங்கிவைத்தனர்.

ஏற்கனவே கடந்த இருபது ஆண்டுகளாக அமரர் ஊர்தி, ஆதரவற்றோர் இறுதிச்சடங்கு, உடல் குளிர்சாதனப் பெட்டி, அரசுப்பள்ளிக்கு வாகனம், ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி, அரசுப்பணித் தேர்வுக்கான பயிற்சிகள், வெளி நாடுகளில் பாதிக்கப்படும் தமிழ்நாட்டினருக்கு உதவி செய்து மீட்டெடுத்தல், பேரிடர் கால உதவி, அரசு மருத்துவமனைக்கு உதவி, சாலையில் அடிபடும் கால்நடைகளுக்கு உதவி, இளைஞர்களுக்கு சாலையோரக் கடைகள் மற்றும் சிறுதொழில் உதவி, இலவச திருமணங்கள் போன்ற சேவைகளை சிறப்பாக செயல் படுத்தி வருகின்றது.
மேலும், சங்கரபதிக்கோட்டை சாந்துச்சாலை போன்ற வரலாற்று சின்னங்களை மீட்டெடுத்தல், அநீதிக்கு எதிரான போராட்டங்கள் என தொடர்ந்து பல்வேறு பணிகளை அதன் தலைவர் ச.மீ.இராசகுமார் வழிகாட்டுதலின்படி மக்கள் மன்ற உறுப்பினர்கள் இணைந்து செய்துவருகின்றனர். கொரோனா காலத்தில் காரைக்குடி சுற்றுவட்டார மக்களுக்கு இவர்கள் செய்த உதவி அளப்பரியது.

இன்று மக்கள் மன்றத்தின் அடுத்தகட்ட சேவையாக நான்கு அவசர ஊர்திகளையும் நான்கு உடல் குளிர் சாதனப்பெட்டிகள், ஆக்சிஜன் இயந்திரங்கள் ஆகியவற்றினை மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் துரை.கருணாநிதி, மக்கள் மருத்துவர் குமரேசன், மக்கள் மன்றத் தலைவர் ச.மீ.ராசகுமார் ஆகியோர் தொடங்கிவைத்தனர். பெரும்பான்மையான மக்கள் மன்ற உறுப்பினர்கள், காரைக்குடியில் உள்ள பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
செய்தி& படங்கள்
சாய்தர்மராஜ்
