
இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற பெருமையையும், சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையையும் இந்திய அணி படைத்துள்ளது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்குத் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. அபிஷேக் சர்மா வெறும் 18 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். மொத்தம் 21 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார்.
மறுமுனையில் ஆடிய சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் குவித்து, டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன் என்ற சாதனையைத் தகர்த்தார். இஷான் கிஷன் 54 ரன்களும், சிவம் துபே 8 பந்துகளில் 26 ரன்களும் விளாச, இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.
256 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அக்சர் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சில் அந்த அணியின் முக்கிய விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. நியூசிலாந்து தரப்பில் டிம் சீஃபர்ட் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். பும்ரா 4 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்தின் வெற்றிக் கனவைத் தகர்த்தனர்.
இறுதியில் நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி விக்கெட்டை அபிஷேக் சர்மா வீழ்த்த, இந்திய அணி தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
இந்திய கிரிக்கெட்டின் இந்த மகத்தான வெற்றியை நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். உலகக் கோப்பை தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்களுக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
