
கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அவருக்கு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்து, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ‘பி.எம். கிசான்’ திட்டத்தில் 21வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித்தொகையை வழங்கி பேசினார். இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சேர்ந்த 21 லட்சத்து 80 ஆயிரத்து 204 விவசாயிகள் பயன் அடைகின்றனர்.
இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 44 ஆயிரத்து 837 பேர் பயன்பெறுகிறார்கள் என தெரிவித்தார். மேலும் அவர், இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
அதன்பிறகு இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அதைத்தொடர்ந்து அவர், இயற்கை விவசாயிகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார். இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கோவை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்களும் பொதுமக்களும் பெருமளவில் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.
கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள கொடிசியா அரங்கில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க இன்று மதியம் கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடி-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து விமான நிலையம் முதல் கொடிசியா கண்காட்சி அரங்கம் வரை சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள், பொதுமக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு அவர்களை நோக்கி கையசைத்தபடியே பிரதமர் காரில் சென்றார்.
