
தமிழ்நாடு இப்போது மாற்றத்துக்கு தயாராகிவிட்டது என மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக்கூட்டப் பரப்புரையில் பிரதமர் மோடி பேசினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘2026-ம் ஆண்டிலே தமிழ்நாட்டுக்கு எனது முதல் பயணம் இது. தமிழகத்தில் பொங்கலுக்குப் பிறகு சிறப்பானதொரு ஆனந்தம் நிறைந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்புதான் தமிழகத்தின் வளர்ச்சி நாயகர் எம்ஜிஆரின் பிறந்த நாளை நாம் கொண்டாடினோம். இந்த மேடையில் இருந்து மதுராந்தகத்தின் ஏரி காத்த ராமரை நான் வணங்குகிறேன். அனைவரின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் நான் வேண்டிக் கொள்கிறேன்.
இன்று நேதாஜியின் பிறந்த நாள். தேசம், இந்த நாளை பராக்கிரம திருநாள் என கொண்டாடி வருகிறது. தமிழகத்தின் பராக்கிரமம் நிறைந்த தலைவர்கள் பலர், நேதாஜியோடு தோள் சேர்ந்து சுதந்திரப் போரில் பங்கெடுத்தார்கள். வீரம் மற்றும் நாட்டுப் பற்று தமிழக மக்களின் நாடி நரம்புகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த புனித மண்ணில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு என் நினைவஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.
மக்கள் அலைகடனெ இங்கே திரண்டிருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தேசத்துக்கும் ஒரு செய்தியை தெரிவிக்கிறது. அது, தமிழ்நாடு இப்போது மாற்றத்துக்கு தயாராகிவிட்டது என்பதுதான். திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது. தமிழ்நாடு இப்போது பாஜக – என்டிஏ அரசை விரும்புகிறது.
இந்த மேடையைப் பாருங்கள். என்டிஏ குடும்பத்தின் நமது மூத்த தலைவர்கள், தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க குழுமியிருக்கிறார்கள். இந்த நண்பர்கள் அனைவரும ஒரே முடிவோடு, ஒரே உறுதிப்பாட்டோடு இங்கே இணைந்திருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? தமிழ்நாட்டை திமுகவிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதே அந்த உறுதிப்பாடு.
நாம் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த, பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். திமுக அரசின் முடிவுக் காலம் (கவுன்டவுன்) தொடங்கிவிட்டது. இதை என்னால், தெளிவாகக் காண முடிகிறது.
ஆட்சி செய்ய நீங்கள் திமுகவுக்கு இரண்டு முறை வாய்ப்பளித்தீர்கள். ஆனால், அவர்கள் தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டார்கள். வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தது திமுக. ஆனால், ஆற்றியது என்னமோ பூஜ்ஜியம்தான்.

திமுக அரசை மக்கள் CMC அரசு என அழைக்கிறார்கள். சிஎம்சி என்றால், corruption (ஊழல்), mafia (மாபியா), Crime (க்ரைம்) ஆகியவற்றை ஆதரிக்கும் அரசாங்கம். தமிழக மக்கள் திமுக மற்றும் சிஎம்சி இரண்டையும் வேரோடு அகற்ற முடிவெத்துவிட்டார்கள். இங்கு பாஜக – என்டிஏ-வின் இரட்டை எஞ்சின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது.
தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட அரசு இருக்கிறது என்றால், இங்கு ஜனநாயகமும் இல்லை, நம்பகத்தன்மையும் இல்லை. திமுக அரசாங்கம் ஒரே ஒரு குடும்பத்துக்காக மட்டும் இயங்குகிறது. நீங்கள் திமுகவில் முன்னேற வேண்டும் என்றால், அந்த குடும்பத்துக்கு ஆமாம் சாமி போட்டாக வேண்டும். இங்கு 3-4 பாதைகள் மட்டுமே இருக்கின்றன. வம்சாவளி, ஊழல், பெண்களை வசைபாடுவது, நமது கலாச்சாரத்தை வசைபாடுவது ஆகியவையே அவை.
இந்த காரணத்தால்தான் திமுகவில் இருப்பவர்களால் கட்சியில் முன்னேற முடிகிறது. இதன் பாதிப்பை தமிழ்நாடு சுமக்க வேண்டி இருக்கிறது. இங்கே ஊழல் எவ்வாறு மலிந்திருக்கிறது, அந்த ஊழல் பணம் யாருடைய பைகளுக்குச் செல்கிறது என்பதை சிறு குழந்தைகூட நன்றாக தெரிந்து வைத்திருக்கிறது.
தமிழ்நாடு எப்படிப்பட்ட பூமி என்றால், இதுதான் பாரதத்தின் பண்பாட்டை வளம் நிறைந்ததாக ஆக்கியது. சங்க கால இலக்கியங்கள், விஞ்ஞானம், ஆலயங்கள், தொழில்நுட்பம், பாரத நாட்டின் கவுரவத்தை உயர்த்தின.
வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டை திமுகவின் கொடூர கரங்களில் இருந்து நாம் விடுவித்தாக வேண்டும். எந்த அளவுக்கு தமிழ்நாடு வேகமாக முன்னேறுகிறதோ, அந்த அளவு தேசமும் முன்னேற்றம் அடையும்.
கடந்த 11 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள என்டிஏ அரசாங்கம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வரலாறு காணாத பணிகளை ஆற்றி இருக்கிறது. 2014-க்கு முன்பு, திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தபோது அப்போது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக குறைவான நிதியே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் அதிகாரப் பகிர்வு வாயிலாக மட்டும் என்டிஏ அரசு கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு வழங்கி இருக்கிறது. காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சிக் காலத்தோடு ஒப்பிடும்போது இது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.
இதுமட்டுமல்ல, கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக மத்திய அரசு 11 லட்சம கோடி ரூபாய் உதவிகளை அளித்திருக்கிறது. ஆனால், திமுக – காங்கிரஸ் கூட்டாட்சியின்போது ஏழைகள், பட்டியல் சமூக மக்கள், பழங்குடி மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நலன்கள் வழங்குகிறோம் என்ற பெயரில் மோசடி மட்டும்தான் அரங்கேறின.
திமுக – காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரயில் பட்ஜெட்டுக்கு அளித்த நிதியைவிட என்டிஏ அரசு ஏழு மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டுக்கு அளித்து வருகிறது. தமிழ்நாட்டில் 80 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் போன்ற நவீனமான, விரைவாகச் செல்லக்கூடிய, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரயில்களை என்டிஏ அரசுதான் அளித்திருக்கிறது.
தமிழநாட்டின் மிகப் பெரிய பலம், நமது விவசாயிகள், நமது மீனவர்கள்தான். என்டிஏ அரசின் கொள்கைகள் காரணமாக தேசத்தின் விவசாயம் மற்றும் மீன்வளத் துறையில் சாதனைப் படைக்கும் உற்பத்தி எட்டப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு ஒவ்வொரு நிலையிலும் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் ஆதரவாக இருந்து வருவதுதான் இதற்குக் காரணம்.
வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவதில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் பெரிய பங்களிப்பு இருக்கிறது. ஆனால், இங்கே இருப்பதோ திமுக அரசு. இவர்கள் நமது இளைஞர்களை போதைப் பொருள் குற்றவாளி கும்பலிடம் ஒப்படைத்துவிட்டார்கள்.
தாய், தந்தையெரல்லாம் தங்கள் கண்களுக்கு முன்பாக, தங்கள் குழந்தைகள் போதைப் பொருட்களுக்கு நாசமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து துடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் நமது இளைஞர்களை போதைப் பொருள் அபாயத்தில் இருந்து மீட்டே ஆக வேண்டும். என்டிஏவுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், தமிழ்நாட்டை போதைப் பொருட்களில் இருந்து மீட்டெடுக்க உதவும் வாக்காக இருக்கும்.
திமுக அரசாங்கத்தில் போதைப் பொருள் பெருங்குற்றவாளிகளும் மதுபான பெருங்குற்றவாளிகளும் செழிப்பாக இருக்கிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியோ மக்களின் உடல் நலத்தில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது’’ என தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக தலைவர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
