
நியோமேக்ஸ் மோசடி வழக்கில், முதலில் கட்டிடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை பொது ஏலம் விடுவதற்கு உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ரியல் எஸ்டேட் நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ், ஹெல்பின், எம்.ஆர்டிடி உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாகவும் முதலீடு முதிர்வு காலத்தில் பல மடங்கு அதிகமாக திருப்பித் தரப்படும் என பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி பல கோடி மோசடியில் ஈடுபட்டன.
இவ்வழக்கை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். மோசடியில் ஈடுபட்ட இயக்குநர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளனர். அவர்களின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என, பலரும் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, “நியோமேக்ஸ் நிறுவனத்தினரின் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. கையகப்படுத்திய நியோமேக்ஸ் சொத்துகளை விரைவாக பிரித்து கொடுக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில், மாவட்ட வருவாய் அலுவலர், பதிவுத்துறை அதிகாரி உள்ளிட்டோர் இருந்தனர். இக்குழு நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை , கையகப்படுத்தியது. அதை நிலங்கள், ஓட்டல், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் என, நான்கு வகையாக வகைப்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் மொத்தம் 60 ஆயிரம் புகார் தாரர்கள் உள்ளனர்.
தற்போது ரூ.6000 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில், முதலில் கட்டிடங்கள் , வணிக வளாகங்கள் உள்ளிட்ட ரூ. 2 ஆயிரம் கோடி சொத்துக்களை பொது ஏலம் விடவேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
