___________________________________________________________________________
____________________________________________________________________________________________________
தலைவன் களவொழுக்கம் உடையவனாய்த் (திருட்டுத் தனமாய்க் காதலனும் காதலியும் சந்திக்கும் சந்திப்பு)
தலைவியை மணக்கும்படி, தலைவனுக்குத் தோழி அறிவுரை கூறல்:
மாமலர் முண்டகம் தில்லையொடு ஒருங்குடன்
கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேல்
சீர்மிகு சிறப்பினோன் மரமுதல் கை சேர்த்த
நீர்மலி கரகம்போல் பழம் தூங்கு முடத்தாழைப்
பூமலர்ந்தவை போல், புள் அல்கும் துறைவ, கேள் – 5
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
“போற்றுதல்” என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
“பண்பு” எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
“அன்பு” எனப்படுவது தன்கிளை செறாஅமை,
“அறிவு” எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் – 10
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
“நிறை” எனப்படுவது மறை பிறரறியாமை
“முறை” எனப்படுவது கண்ணோடாது உயிர்வௌவல்
“பொறை” எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்
ஆங்கு அதை அறிந்தனர் ஆயின் என் தோழி – 15
நல்நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க
தீம்பால் உண்பவர் கொள்கலம் வரைதல்
சென்றனை களைமோ பூண்க நின்தேரே -19
இப்பாடலுடன் கவின்மிகு காட்சிகளில் ஒரு சிலவற்றை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
___________________________________________________________________________________________


இல்வாழ்வு நடத்துதல் வறியவர்களுக்கு ஏதேனும் உதவுதலுக்கே ஆகும். ஒன்றைப் பாதுகாத்தல் எனச் சொல்லப்படுவது நட்புடையவரைப் பிரியாதிருத்தல் ஆகும். மக்கள் பண்பு என்பது பண்புடையோர் நடந்து கொள்ளும் முறையில் நடந்து கொள்வது. அவர்களை வெறுக்காமல் விரும்பி வாழ்வது, அறிவு எனப்படுவது தம்மை விடத் தாழ்ந்தோர் கூறும் அறிவற்ற சொற்களைப் பொறுத்துக் கொள்வது. நட்பு எனப்படுவது நண்பர்கள் கூறுவதை மறுக்காது செய்தல். நிறை எனப் படுவது மறை பொருளைப் பிறர் அறியாது பாதுகாத்தல். இதையே பிற்கால ஔவை “உடையது விளம்பேல்” என ஒரு வரியில் கூறினார். நீதிமுறை என்று சொல்லப்படுவது நடுவு நிலையோடு தீர்ப்பு வழங்கல். “மனுநீதிச் சோழன், தன் புதல்வன் வீதிவிடங்கன், ஆவின் கன்றைக் கொன்றதற்காகத் தன் மகன் என்றும் பாராது புதல்வனையே கொல்லுதல். இதுவே கண்ணோடாது உயிர் வௌவல் ஆகும். பொறுமை எனக் கூறப் பெறுவது தம்மைப் பழித்தவர்களையும், போற்றாதவர்களையும் பொறுத்துக் கொள்ளுதல். இவ்வாறு வாழ்க்கைக்கு எவையெல்லாம் தேவையென நன்கு சிந்தித்து விதிமுறைகளைக் கூறுகிறான் சோழன் நல்லுருத்திரன். இச்செய்திகளைக் கூறித் தோழி தலைவனிடம் அவற்றை (மேற்கூறிய அறங்களை) நீ அறிந்து கொள்வாயானால் அந்த ஒழுக்கத்திற்கு ஏற்ற ஒரு செய்தி கூறுகிறேன். நெய்தல் நிலத் தலைவனே, என் தோழியின் நல்ல நெற்றியின் நலத்தை அனுபவித்து (நெற்றியில் முத்தமிடும் நாகரிகம் இது) அவளைக் கைவிடல், இனிய பாலை உண்பவர், பாலை உண்டு அதனைக் கொண்டிருக்கும் கலத்தைக் கவிழ்த்து விடுதல் போன்றதில்லை. ஆதலால், உன்னால் வருத்தப்பட்டவள் துன்பத்தை, அவளை மணம் செய்து கொண்டு போக்குவாயாக. அங்ஙனம் தலைவியின் துன்பத்தைப் போக்க நின்தேர் குதிரையைப் பூட்டிக் கொள்வாயகா எனத் தெளிவு படுத்தித் தலைவனைத் திருமணம் செய்ய வற்புறுத்தினாள்.