
6-வது முறையாக திமுக பதவியேற்று 4-ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ‘திமுகவை வீழ்த்த முடியாதா என தொடர் தோல்வியின் ஆற்றாமையில் எதிர்க்கட்சியினர் தவிக்கின்றனர். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதிசெய்ய கடும் உழைப்பு தேவை’ என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என பதவியேற்பு உறுதிமொழி ஏற்று, இந்த மே மாதம் 7-ம் தேதியுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என் தலைமையிலான திமுக அரசு. நம்பிக்கை வைத்து ஆட்சியை ஒப்படைத்த தமிழக மக்கள் அனைவருக்குமான திட்டங்களை வழங்கும் நல்லாட்சியை வழங்கி வருகிறோம்.இந்தியாவின் பிற மாநிலங்களும், கொள்கைரீதியாக நமக்கு என்றும் எதிரானவர்கள் ஆளும் மாநிலங்களும்கூட திமுக அரசின் திட்டங்களைப் பின்பற்றும் வகையில் முன்னோடியான அரசாக தமிழகத்தை இந்த 4 ஆண்டுகளில் உயரத்தியுள்ளோம். நாடு போற்றும் சாதனைகளுடன் 5-ம் ஆண்டில் திமுக அரசு பெருமிதத்துடன் அடியெடுத்து வைக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கும் இந்த நல்லாட்சி தொடரும் என்பதை தமிழக மக்களின் மனநிலை காட்டுகிறது.திமுக 6 முறை ஆட்சி செய்யக் கிடைத்த வாய்ப்புகளில் தமிழகத்தின் சமூக – பொருளாதார முன்னேற்றத்தை உறுதிசெய்து, ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறும் வகையிலான திட்டங்களை நிறைவேற்றி, நவீன தமிழகத்தை கட்டமைத்தது. 7-வது முறையாக 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் போவதும் திமுகதான்.
மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதிசெய்ய களத்தில் கடுமையாக உழைத்திட வேண்டும். அரசியல் எதிரிகளால் நமது ஆட்சியைக் குறை சொல்ல முடியாத காரணத்தால் அவதூறு சேற்றை வீசுகிறார்கள். அதிகார அமைப்புகளை ஏவி அரசியல் பழிவாங்குகின்றனர். இந்தப் பூச்சாண்டிகளுக்கு மிரள அடிமைக் கட்சியல்ல, திமுக. தன்மானமும் தைரியமும் கொண்ட, தமிழக உரிமைகளை மீட்டெடுக்கும் இயக்கம்.
மே 3-ம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்ட முடிவின்படி, ‘நாடு போற்றும் நான்காண்டு – தொடரட்டும் பல்லாண்டு’ என்ற தலைப்பில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை 868 ஒன்றியங்கள், 224 பகுதிகள், 152 நகரங்கள் என 1244 இடங்களில் 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 கழகப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாத சாதனைத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்குப் பயனளித்து வருகின்றன. இன்னும் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளும் இருப்பதை நான் மறக்கவோ, மறுக்கவோ இல்லை. நிறைவேற்ற உறுதியாக இருக்கிறேன்.
இனி ஓராண்டு நமக்கு தேர்தல் பணிகளே முதன்மையானதாக இருக்கும். திமுகவின் பவள விழாப் பொதுக்குழு ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. அதில், தேர்தல் பணிகள் குறித்து இன்னும் விரிவான செயல்திட்டங்கள் முன்வைக்கப்படும்.
பேச்சில் கண்ணியம் வேண்டும்: முன்னதாக, 1,244 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில், சொற்பொழிவாளர்கள் 4 ஆண்டுகால திமுக அரசின் சாதனைகள், மக்கள் பெற்றுள்ள பயன்களை எடுத்துரைக்க வேண்டும். நம்மை எதிர்ப்பவர்கள் தங்கள் மேடைகளில் பொய்யாக, மோசமாக, ஆபாசமாக, அருவருப்பாகப் பேசினாலும், நமது பேச்சாளர்கள் கண்ணியக்குறைவான சொற்களைப் பயன்படுத்தக்கூடாது.
இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்பும் சமூக வலைதளங்களில் பாக முகவர்களும், பூத் கமிட்டி உறுப்பினர்களும், கழகத்தின் மற்ற நிர்வாகிகளும் முனைப்புடன் செயல்பட வேண்டும். திமுக அரசின் சாதனைகளும் அதன் பயன்களும் ஒவ்வொரு வாக்காளரிடமும் போய்ச் சேர வேண்டும்.
சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து தமிழகத்துக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் திமுகவை வீழ்த்த முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கின்றனர்.
நாம் மக்களிடம் செல்வோம். அவர்களுக்காக திமுக அரசு செய்ததைச் சொல்வோம். தமிழகம் முழுவதும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவற்றை எடுத்துரைப்போம். திமுக சொற்பொழிவாளர்களின் கருத்துகளை உள்வாங்கி, கழக அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று முழங்குவோம். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.