
இந்திய நாட்டையே அதிரவைத்த கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதே நேரம் நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டார்.
பிரபல மலையாள நடிகர் திலீப். இவரது முன்னாள் மனைவி நடிகை மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பின் ரகசிய உறவுகளை இன்னொரு நடிகை, மஞ்சு வாரியரிடம் கூறிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சு வாரியர், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.
இதற்கு, குறிப்பிட்ட அந்த நடிகை தான் காரணம் என்று திலீப் முடிவு செய்தார். அவர் ஏற்பாடு செய்த கூலிப்படை, நடிகையை காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது.
இந்த சம்பவம் கடந்த 2017ம் ஆண்டு நடந்தது. பிரபல நடிகர், நடிகைகள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இவ்வழக்கை விசாரித்த போலீசார், நடிகர் திலீப் மற்றும் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட 8 பேரை கைது செய்து, அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.
எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் எர்ணாகுளம் முதன்மை நீதிமன்ற நீதிபதி ஹனி வர்கீஸ் தீர்ப்பு வழங்கினார். அதில் பாலியல் வழக்கில் பெரும்பாவூரைச் சேர்ந்த பல்சர் சுனி உள்பட6 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.
பாலியல் துன்புறுத்தலில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பல்சர் சுனி செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பல்சர் சுனி, மார்ட்டின் அந்தோணி, மணிகண்டன், விஜீஸ், சலீம், பிரதீப் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதே நேரம், நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் படவில்லை என அவரை விடுதலை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல், நடிகர் திலீப்பின் நண்பரான சரத்தையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. குற்றவாளிகளின் தண்டனை வரும்.டிச.12-ஆம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
